இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 92,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 68 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 96 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக அபாயம் கொண்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
பதிவான மொத்த நோயாளர்களில் 48,725 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இது மொத்த நோயாளர்களில் 52.96 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெங்கு அதிகமாகப் பதிவாகும் மாகாணமாக மேல் மாகாணம் காணப்படுகிறது.
இதேவேளை, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஆகஸ்ட் முதல் 15 நாட்களில் 6,671 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றி, கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை இல்லாதொழிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், தொடர்ந்து காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







