கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை, முஸ்லிம் சமூகத்தை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
முஸ்லிம் பெண்கள் நீண்டகாலமாக ஹிஜாப் உள்ளிட்ட தங்களது மத மற்றும் கலாசார ஆடைகளுடன் ஆசிரியர், தாதியர் மற்றும் மருத்துவத் துறைகளில் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சீருடை தொடர்பான தற்போதைய சர்ச்சைக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் இதேபோன்ற ஆடை நடைமுறை தொடர்பில் பிரச்சினைகள் எழாத நிலையில், கல்முனை வடக்கு வைத்தியசாலையில் மாத்திரம் இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளமை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் சமூகங்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்த்து, அரசாங்கம் இந்த விவகாரத்தில் விரைவாக தலையிட்டு தீர்வொன்றை வழங்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.








