நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களை செயற்கையாகப் பழுக்க வைப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தைகளில் நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழம், மாம்பழம், பப்பாளிப் பழம் உள்ளிட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்த அவர், இவ்வாறான செயல்கள் பொதுமக்களின் உடல்நலனுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைக்கும் இடங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், வியாபாரிகளுக்கு தேவையான விழிப்புணர்வு வழங்கப்பட்ட பின்னரும் இந்த சட்டவிரோத நடைமுறை தொடருமானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.








