அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரி ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கடற்படை சுழியோடிகளால் இன்று (04) காலை விபத்துக்குள்ளான படகிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி 12 கடற்படை வீரர்களுடன் பயணித்த அதிவேக தாக்குதல் படகு அங்குலான கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்தைத் தொடர்ந்து அங்குலான பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் 11 கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனினும், ஒரு கடற்படை அதிகாரி காணாமல் போயிருந்தார்.
அவரைத் தேடும் பணிகள் விபத்து இடம்பெற்ற கடற்பகுதி உள்ளிட்ட சுற்றுவட்டார கடல் பகுதிகளிலும், பாணந்துறை முதல் கொழும்பு ஊடாக சிலாபம் வரையிலான கடலோரப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று காலை விபத்துக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட சடலம் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரியினுடையதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







