ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் ஒருமித்த எதிர்க்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான பிரபா கணேசன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை சௌமியபவனில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒருமித்த எதிர்க்கட்சியின் கூட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன், செந்தில் தொண்டமானுக்கு விளக்கமளித்துள்ளார்.
கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்த செந்தில் தொண்டமான், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது நன்கு ஆராய்ந்து, ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் முன்னெடுக்கும் மக்கள் நலத்திட்டங்களில் சிறந்த திட்டங்களை பாராட்டுவதற்கான பக்குவமும் அரசியல் தரப்புகளிடம் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







