எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் கடும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து, அதனை விரைவாக இரத்து செய்வதுடன், சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு அமைவான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாக அளித்த உறுதிமொழிகளின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகால தடுப்புக் காவல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டில் காவல் அல்லது தடுப்புக் காவலில் இருந்தபோது 18 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 2026 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டில் சித்திரவதை மற்றும் கொடூரமான தாக்குதல்கள் தொடர்பாக 602 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2026 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் 138 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சில வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், யுத்த காலத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை போதுமான மற்றும் நிலையான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட இராணுவ மற்றும் சிவில் புலனாய்வு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கண்காணித்தல், அச்சுறுத்துதல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்தல், புதிய காணி சுவீகரிப்புகளை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஐ.நா. பரிந்துரைத்துள்ளது.
மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம், ICCPR சட்டம் மற்றும் வரைவிலுள்ள NGO சட்டம் ஆகியவற்றை திருத்துதல் அல்லது இரத்து செய்வது தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசல் மற்றும் வன்முறைகளை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக சுகாதார அடிப்படையிலான மறுவாழ்வு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.







