2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் விதிகளை மீறியமை தொடர்பில், 11 நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் முதல் இவ்வருடம் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சட்ட மீறல்களை அடிப்படையாகக் கொண்டு, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு இந்த அபராத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பணச்சலவையைத் தடுப்பது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதை கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குறித்த 11 நிறுவனங்களுக்கு மொத்தம் 14.6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாக அபராதங்களாக அறவிடப்பட்ட அனைத்து நிதிகளும் அரசின் ஒருங்கிணைந்த நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.








