கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றிய 44 வயதுடைய இலங்கை வம்சாவளி மருத்துவர் ஒருவர், குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்ததுடன், அவற்றை இணையம் மூலம் அணுகியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொராண்டோ பொலிஸாரின் இணையவழி குழந்தை துஷ்பிரயோக விசாரணைப் பிரிவு 2026 ஜனவரியில் தொடங்கிய விசாரணையைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் மருத்துவமனை மற்றும் சந்தேக நபரின் இல்லத்தில் சோதனை நடத்தி, பணியிடக் கணினி உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களை கைப்பற்றியது.
சந்தேக நபர் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் அவரது மருத்துவப் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் குறித்த மருத்துவரை உடனடியாக பணியிலிருந்து விடுப்பில் அனுப்பியதாக மருத்துவமனை அறிவித்ததுடன், இந்தச் சம்பவம் தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.








