பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா தனது 90ஆவது வயதில் இன்று (11) காலமானார்.
வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எளிமையான தமிழிலும் நகைச்சுவை கலந்த பேச்சிலும் பட்டிமன்றங்களை நடத்தி மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்த சாலமன் பாப்பையா, அன்றாட சமூக மற்றும் குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்ட தலைப்புகளில் பல்வேறு பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார்.
1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி மதுரை மாவட்டம் சாத்தங்குடியில் பிறந்த அவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடாகவும் இலக்கிய விளக்கங்களை வழங்கி பிரபலமானார்.
இலக்கியப் பணிகளுக்கு அப்பால், இயக்குநர் ஷங்கரின் ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’ மற்றும் ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பில் பல்வேறு உரை மற்றும் திறனாய்வு நூல்களை எழுதியுள்ள சாலமன் பாப்பையா, ‘பட்டிமன்றமும் பாப்பையாவும்’ உள்ளிட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், 2000ஆம் ஆண்டு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும், 2010ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ‘முத்தமிழ் பேரறிஞர்’ விருதும் வழங்கப்பட்டன.
மேலும், தமிழ்த் துறையில் அவர் ஆற்றிய பணியைப் பாராட்டி 2021ஆம் ஆண்டு இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டது.
தமிழ் இலக்கியத்தையும் பட்டிமன்றக் கலையையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் இலக்கிய உலகில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.







