இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (27) வரையான தரவுகளின்படி, மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 82,838 ஆக உயர்ந்துள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் இதுவரை 27,464 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளமை, நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், மொத்த பாதிப்புகளில் 21.25 சதவீதம் அந்த மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 16,457 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,685 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை டெங்கு காரணமாக 61 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.07 சதவீதமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.








