இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதே வகுப்பில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்கள் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, சந்தேகநபர்களான மாணவர்களில் இருவரை 28 நாட்களுக்கு சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனைய மூன்று மாணவர்களையும் பெற்றோரின் பொறுப்பில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருவிட்ட பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்து, ஐந்து மாணவர்களையும் கைது செய்துள்ளது.
ஆரம்ப விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் நேரடியாக பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், ஏனைய மூவர் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








