வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலமாகும் எனத் தெரிவித்துள்ள சந்தபோதி தேரர், அப்பகுதியில் முன்னர் இருந்ததாகக் கூறப்படும் 11 அடி உயரமான புத்தர் சிலையை மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன், சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று (சனிக்கிழமை) வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்றுள்ளனர்.
மலைப் பகுதிக்குச் சென்ற குழுவினர், சூலம் அமைந்திருந்த இடத்தில் சுமார் ஒன்றரை மணிநேரம் பிரித் ஓதி, பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, அக்காலப்பகுதியில் சைவ பக்தர்கள் மலை உச்சிப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் வெடுக்குநாறிமலையில் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், தற்போது அந்த சிலை தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குறித்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடுகள் 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் அங்கு போலியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் சந்தபோதி தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

வெடுக்குநாறிமலை தொடர்பில் சைவ மற்றும் பௌத்த தரப்புகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் உரிமை மற்றும் வழிபாட்டு சர்ச்சைகளுக்கு மத்தியில், சந்தபோதி தேரரின் இந்தக் கருத்துக்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
இதையடுத்து, அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.








