நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நெல் கொள்வனவுக்கு விண்ணப்பித்துள்ள அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வும், அவர்களுடனான கலந்துரையாடலும் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெல்லை கொள்வனவு செய்வதற்காக மாவட்டம் தோறும் தனியார் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 10 அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்வனவில் ஈடுபடுவதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், முதற்கட்டமாக 4 பேருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 6 பேருக்கான கொடுப்பனவுகளும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கிளிநொச்சியில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நெல்லை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரிசி ஆலையில் முதலில் நெல் மாதிரியை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், கமநல சேவை நிலையத்தில் ARPA / APC ஊடாக தங்களது பெயரைப் பதிவு செய்து நெல் கொள்வனவுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள அல்லது தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரிசி ஆலைகளை விரைவாக அடையாளம் கண்டு, நெல் மாதிரிகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திலும் 13 அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்வனவில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த அரிசி ஆலை உரிமையாளர்கள் எந்தெந்த பகுதிகளில் நெல் கொள்வனவு செய்ய முடியும் என்பது தொடர்பான ஒதுக்கீடுகள் விரைவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







