வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்றதாகக் கூறப்படும் சிறை காவலர் ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலில் சிறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையின்போது, குறித்த சிறை அதிகாரி அணிந்திருந்த காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 16.7 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றி வரும் சிறை காவலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், போதைப்பொருட்களை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்றதன் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.







