தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகிலுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புதுமடம் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகத்திற்கிடமான சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 146 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 292 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்தக் கஞ்சா இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பெருங்குளம் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த தங்கராஜ், சேகர் ஆகிய மூவரை கைது செய்துள்ள பொலிஸார், கடத்தல் வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








