சவூதி அரேபியாவில் சிறையில் வாடி வரும் இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் மற்றும் அவரை விடுதலை செய்யக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் அட்டைகளை ஏந்தியவாறு தமது கோரிக்கையை வெளிப்படுத்தினர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்ட ஏற்பாட்டாளர்களின் பேச்சாளர், இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து சிவராசா அனோஜன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவரை விடுதலை செய்து, அவரது குடும்பத்தினர் நிம்மதியாக வாழ்வதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு மதுபோதையில் வந்ததாகக் கூறப்படும் ஒருவர், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியில் குறித்த பகுதிக்கு வந்த அந்த நபர், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபடும் வகையில் செயற்பட்ட பின்னர், அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

















