கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கும், தொடர்புடைய யூடியூப் மற்றும் முகநூல் தளங்களுக்கும் எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளை ஒன்றை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனங்கள் தொடர்பாகவும், அவர்கள் அணியும் உடை தொடர்பாகவும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகள் பதிவிடப்பட்டதாக முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் முகமது இப்ராஹீம் ஆகியோருக்கு எதிராகவும், தொடர்புடைய யூடியூப் மற்றும் முகநூல் தளங்களுக்கு எதிராகவும் வைத்தியர் கு. சுகுணன் நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு இன்று திறந்த நீதிமன்றில் நீதவான் அண்ணத்துரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்காளி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் மற்றும் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஆகியோர் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து, நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளை ஒன்றை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.







