நுவரெலியா, சீத்தாஎலிய – போலகந்த பகுதியில் காணி மற்றும் பாதை தொடர்பான தகராறின்போது பெண்ணொருவரின் காதைக் கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
சீத்தாஎலிய பகுதியைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவரின் காணிக்கு முன்பாக அமைந்துள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த மார்ச் 4ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட முரண்பாட்டின்போது அவரது காதில் கடித்து காயம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், எனினும் பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டு, சந்தேகநபருக்கு ஆதரவாக நடந்துகொண்டதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், சம்பவத்தின் பின்னணியில் மத அடிப்படையிலான பாரபட்சம் காணப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ‘United Human Rights Organization’ அமைப்பின் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு, 1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இதற்கமைய, கடந்த ஜூலை 31ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலாளருக்கு ஆணைக்குழுவினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்று சுமார் ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
எந்தவிதமான மதப் பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல், அரச அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணையை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துரிதமாக நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.








