ஜப்பானின் சிபா மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் கல்வி பயின்று வந்த குறித்த இளைஞர், தன்னுடன் தங்கியிருந்த 18 வயதுடைய மற்றுமொரு இலங்கை இளைஞரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதைத் தொடர்ந்து இந்தக் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஜப்பான் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின்போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, ஏற்பட்ட ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜப்பான் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








