யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் இனவாத மற்றும் மதவாத அரசியலை முன்னெடுத்து, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் சிறிய சம்பவங்களைக்கூட அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
திலீபனின் சிலை அமைப்பதற்கான அனுமதி உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு யாழ்ப்பாண மாநகரசபைக்கு இருந்ததாகவும், மாநகரசபை தனது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளாததால் பொலிஸார் சட்டரீதியாகத் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் தங்களது கடமையையும் மாநகரசபை தனது பொறுப்பையும் சரியாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், இரு தரப்பினரின் பொறுப்புகளும் தலைகீழாக இடம்பெற்றமையே சிலை அகற்றப்பட்டமைக்குக் காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








