அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கடல்மண் கடத்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உரப்பைகளில் கடல்மண்ணை நிரப்பி, மோட்டார் சைக்கிள்கள் மூலம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தினமும் 20க்கும் மேற்பட்ட மண் மூடைகள் இவ்வாறு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் பொலிஸார், கடற்படையினர் மற்றும் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த நிலையில், தற்போது கண்காணிப்புகள் குறைந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் கடல்மண் அகழ்வு அதிகரித்து, கரையோரச் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சிலர் இரவு நேரங்களில் வீட்டுக் கழிவுகளைக் கடலில் கொட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, சட்டவிரோத கடல்மண் கடத்தல் மற்றும் கடலில் கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







