போக்குவரத்து விதிமீறல்களுக்காக வாகனங்களை நிறுத்தும் போது, புதர்கள் அல்லது தனிமையான மறைவிடங்களில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என, பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வாகனங்களை நிறுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில், பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் தெளிவாகத் தெரியும் திறந்த மற்றும் பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீதியோரங்களில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள பொலிஸ் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களில் இந்த விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு நினைவூட்டியுள்ளார்.
போக்குவரத்து சோதனைகள் வெளிப்படைத்தன்மையுடனும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.








