வாடகைக்கு வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை வழங்கும் உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்களின் பின்னணியை முறையாக ஆராய்ந்த பின்னரே சொத்துக்களை வழங்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாடகைக்கு வழங்கப்படும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுவதாக பொலிஸ் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
சில சொத்து உரிமையாளர்கள் வாடகைக்கு வருபவர்களின் பின்னணியை ஆராயாமல் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வாடகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்களில் குற்றச் செயல்கள் இடம்பெறும் பட்சத்தில், சம்பவத்தின் தன்மை மற்றும் சட்ட விதிகளுக்கு அமைய சொத்து உரிமையாளர்களும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், தமது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், புதிதாக அறிமுகமில்லாத நபர்களின் நடமாட்டம் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குற்றச் செயல்களைக் கண்டறிந்து தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த அவர், நாட்டில் சட்டவிரோத போதைப்பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.







