ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாகாணத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்துக்குள் 360 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் முக்கிய வீதிகள் மற்றும் தொடருந்துப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், போக்குவரத்துச் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்துக்குள் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த ஜப்பான் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
சிபா மாகாண ஆளுநர் தோஷிஹிட்டோ குமாகாய், தனது வாழ்நாளில் பல இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்ட போதிலும், இதுபோன்ற மோசமான சூழ்நிலையை இதுவரை சந்தித்ததில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தரைவழிப் போக்குவரத்து சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், டோக்கியோவிலுள்ள நரிடா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








