நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு தணிக்கைக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த தணிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வுட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், அனர்த்த நிவாரணங்கள், கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு, சமுர்த்தி நிவாரணங்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் அல்லது ஆவணங்கள் இருந்தால் தணிக்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தமக்கு வழங்குமாறு பயனாளிகளிடம் மஞ்சுள சுரவீரஆரச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.







