அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (30) பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பழைய வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும், வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது நடவடிக்கையின்போது குறித்த நபரிடமிருந்து 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








