செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டிடத்தை அகற்றுவதற்கும், அங்கு இயங்கி வரும் வர்த்தக நிலையங்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதற்கும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் அலுவலகம் விடுத்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 15ஆவது சபைக் கூட்டத்தில் தவிசாளர் மு.முரளிதரன் சமர்ப்பித்த விசேட தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன், செங்கலடி நகரம் ஏறாவூர் பற்றின் பிரதான நகரமாக இருப்பதால், அதனை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்து வர்த்தக நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் பழமையான செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டிடம் மக்கள் பாவனைக்கு உகந்ததல்ல என கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கட்டிடத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தைக் கட்டிடத்தை அகற்றுவதுடன் அங்கு இயங்கி வரும் வர்த்தக நிலையங்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது தொடர்பிலும், புதிய சந்தைக் கட்டிடத்திற்கான வடிவமைப்பு மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலும் விசேட குழுவொன்றை அமைக்க வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார்.
தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை அமைத்து, நவீன வசதிகளுடன் புதிய சந்தைக் கட்டிடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், செங்கலடி நகரின் பிரதான வீதிகள், சந்தை வீதி மற்றும் வீதி சமிக்ஞை விளக்குகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி நகரை வர்த்தக மையமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டிடத்தை அகற்றுதல், அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாற்று இடம் வழங்குதல் மற்றும் புதிய சந்தைக் கட்டிடத்தின் வடிவமைப்பு உள்ளிட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான குழுவை அமைக்க ஏறாவூர் பற்று பிரதேச சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.








