தமிழரசுக் கட்சியின் அனைத்து தலைவர்களும் கட்சியின் யாப்புக்கு அமைவாக புதிய தேர்தலை நடத்த இணங்கிச் செயற்பட்டால், தான் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக பரா சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சியின் தேர்தல் நடைமுறையில் தவறுகள் இடம்பெற்றுள்ளதாகவும், யாப்புக்கு முரணான வகையில் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, வாக்களிக்கத் தகுதியானவர்கள் 156 பேர் எனக் கூறப்பட்ட நிலையில், 326 பேர் வாக்களித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
“யார் தலைவர் என்பதல்ல எனது நோக்கம். கட்சியின் யாப்பை மதித்து, சட்டபூர்வமான ஜனநாயகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தேர்தல் நடத்த இணங்கினால், நான் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருக்கிறேன்” என பரா சந்திரசேகரம் தெரிவித்தார்.
மேலும், ”ஸ்ரீதரன் ஜயா, குணநாயகம், மாவை ஜயா, சத்தியலிங்கம், குகதாசன் ஜயா, யோகஸ்வரன் ஜயா மற்றும் சுமந்திரன் ஜயா உள்ளிட்டவர்கள் தேர்தல் தொடர்பில் தவறு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டு, பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புதிய தேர்தலை நடத்தி தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகப் பொறுப்பாளர்களைத் தெரிவுசெய்வது தொடர்பாக முன்னர் இணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து மாறி, ஏற்கனவே நடைபெற்ற தேர்தலின் முடிவையே தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், இயல்பாகவே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: தவறு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், அந்தத் தவறை சட்டபூர்வமான புதிய தேர்தல் மூலம் ஏன் சரிசெய்யக்கூடாது?
ஒருரு கட்சியின் பதவிகள் தனிநபர்களின் சொத்து அல்ல. அவை கட்சியின் உறுப்பினர்களால், கட்சியின் யாப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைவாக வழங்கப்படும் பொறுப்புகளாகும். எனவே, இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாடு தெளிவானது.
நான் இந்த வழக்கைத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான ஒரே நிபந்தனை; இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்பையும் சட்டத்தையும் மதித்து, முறையான மற்றும் ஜனநாயகமான புதிய தேர்தலை நடத்த வேண்டும். யார் தலைவர் என்பதோ, யார் எந்தப் பதவியில் இருப்பதோ எனது தனிப்பட்ட நோக்கம் அல்ல.
சட்டத்திற்கு அமைவான தேர்தல் வேண்டும். உறுப்பினர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். கட்சியின் யாப்பு மதிக்கப்பட வேண்டும். ஜனநாயக நடைமுறை நிலைநாட்டப்பட வேண்டும். பதவியில் தொடர்ந்து இருப்பதற்காக அல்ல; கட்சியின் எதிர்காலத்திற்காக சரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். சட்டப்படி தேர்தல் நடத்துங்கள். உறுப்பினர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். பிரச்சினைக்கு நிரந்தரமான ஜனநாயகத் தீர்வை வழங்குங்கள்- என்றார்.







