மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘Filgrastim’ ஊசி மருந்துக்கு நிலவும் தட்டுப்பாட்டை ஒரு வாரத்திற்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Filgrastim மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்ட அமைச்சர், பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண விசேட மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கீமோதெரபி உள்ளிட்ட புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் இந்த மருந்து தட்டுப்பாடு காரணமாக, சில நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு அதனை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், முறையான கொள்முதல் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு சுமார் ஆறு வாரங்கள் தேவைப்படும் எனவும், அதற்கு முன்னர் நோயாளர்களின் உடனடி தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் Filgrastim உள்ளிட்ட அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவது தொடர்பில் சுகாதாரத் துறையினரிடமிருந்தும் அண்மையில் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.








