பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சட்டவிரோத பணத்தை வங்கிகள் ஊடாக பரிமாற்றம் செய்ய உதவியதாகக் கூறப்படும் முன்னணி வங்கி அதிகாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிரப்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கமாக பெருந்தொகையான பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது, வங்கி விதிமுறைகளுக்கு அமைய உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
எனினும், வங்கி உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் உரிய ஆவணங்கள் இன்றி அல்லது விதிமுறைகளை மீறி, சந்தேகத்திற்கிடமான பெருந்தொகை பணப்பரிமாற்றங்கள் எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியதாக சந்தேகிக்கப்படும் பல வங்கி அதிகாரிகள் தொடர்பில் CID விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், சட்டவிரோத பணப்பரிமாற்றங்களுக்கு துணைபோனதாக சந்தேகிக்கப்படும் வங்கி உயர் அதிகாரிகள் பலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








