நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் நிலைமை தொடர்பில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
இந்த உரையாடலின்போது, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் விஜித்த ஹேரத் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து நேபாளத்திற்கு தேவையான குறிப்பிட்ட உதவிகளை அடையாளம் கண்டு அவற்றை வழங்குவதற்காக, அந்நாட்டு அதிகாரிகளுடன் இலங்கையின் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் நெருக்கமாக இணைந்து செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்துடனான ஒற்றுமையையும் உறுதியான அர்ப்பணிப்பையும் இலங்கை தொடர்ந்து வெளிப்படுத்தும் என தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், நேபாளத்தை இலங்கையின் நெருங்கிய நண்பரும் அண்டை நாடுமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிரிழப்புகளையும் பாரிய அழிவுகளையும் ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேபாள வெள்ள அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு நேபாளத்திற்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.








