கெப்பித்திகொல்லாவ பகுதியில் விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற கோர வாகன விபத்தில், 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்தில் இருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







