நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுத்து வருவதாக புதிய கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘இந்தியா டுடே–சிவோட்டர்’ நிறுவனங்கள் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் ‘Mood of the Nation’ கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் தெரிவுகளில் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில் 9.2 சதவீதமானோர் விஜய்யை அடுத்த பிரதமராக தெரிவு செய்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத வாக்குகளுடனும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத வாக்குகளுடனும் முதல் இரு இடங்களில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விஜய்க்கு அடுத்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 சதவீத ஆதரவுடனும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 1.7 சதவீத ஆதரவுடனும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அபிஜீத் டிப்கே 1.3 சதவீத ஆதரவுடனும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 1.2 சதவீத ஆதரவுடனும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகராக பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கியதுடன், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் ஆரம்பித்தார்.
அவரது அரசியல் செல்வாக்கு மற்றும் தேசிய அரசியலில் எதிர்கால பங்கு தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.







