இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் ஷிரான் பாசிக், தன்னை விடுவிப்பதற்கும் வழக்கு விசாரணைகளைத் திசைதிருப்புவதற்கும் சுமார் 5000 மில்லியன் ரூபாவை (500 கோடி) தயார் செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டுபாயை மையமாகக் கொண்டு இயங்கும் முகமது சித்தீக்கின் நெட்வொர்க் மூலம் கொழும்பில் நிர்வகிக்கப்படும் இந்நிதி, பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் அளிக்கவும், பொதுப் பிம்பத்தைக் கட்டியெழுப்பச் சில ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் “சாண்ட்ரா” என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட 42 வயதுடைய பெண் ஒருவர் பாசிக்கின் நீண்டகாலத் தொடர்பாளராகச் செயற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூவரிடம் இது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பொரலஸ்கமுவ பகுதியில் இரு வீடுகள் மற்றும் தெஹிவளை, வெள்ளவத்தை பகுதிகளில் ஐந்து ஹோட்டல்கள் நண்பர்களின் பெயர்களில் தனக்குச் சொந்தமாக இருப்பதை பாசிக் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகம் உள்ளிட்ட 3 அரச புலனாய்வு அமைப்புகள் அவரது சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.







