பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்துவரும் நிலையில், இளம் ஜோடி ஒன்று வெள்ள நீரில் மூழ்கியிருந்த தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
மணிலாவின் வடக்கே அமைந்துள்ள புலக்கான் மாகாணத்தின் ஹாகோனோய் பகுதியில் உள்ள புனித யோவான் பாப்திஸ்தார் தேவாலயத்தில், செப்டெம்பர் 1ஆம் திகதி லெயான் லீசா கலாங் மற்றும் கில்பர்ட் சிக்கோ ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.
வெள்ள நிலைமை மோசமடைந்ததால் திருமணத்தை பிற்போடுமாறு பங்குத்தந்தை அறிவுறுத்தியிருந்த போதிலும், மணமக்கள் தங்களது திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 15க்கும் குறைவானோரின் பங்கேற்புடன் எளிமையான முறையில் திருமணச் சடங்குகள் இடம்பெற்றுள்ளன.
வெள்ள நீர் முழங்கால் அளவு வரை தேங்கியிருந்த நிலையில், மணமகள் நீரில் நடந்து செல்ல ஏற்றவாறு தனது நீண்ட திருமண ஆடையில் மாற்றங்களை செய்திருந்தார். மேலும், திருமண ஆடை நனையாமல் இருப்பதற்காக தேவாலயத்தை சென்றடையும் வரை உயர்த்தப்பட்ட ரிக்ஷா வாகனத்தில் பயணித்துள்ளார்.
இதனிடையே, பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பெய்த கடும் தென்மேற்கு பருவமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்தங்களில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







