நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி செல்வாநகர் மயானக்காணியில் இடம்பெறும் அத்துமீறிய காணி அடைப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன், குறித்த பகுதிக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (04) நடைபெற்றபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த மயானக்காணி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அப்பகுதியில் காணிகளை அத்துமீறி அடைத்து கட்டுமானங்களை முன்னெடுப்பது சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வழக்கு நிலுவையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த காணிகளுக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுவது மற்றும் அங்கு கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவது நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் நிலைமையையும் உருவாக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.
எனவே, நீதிமன்ற வழக்கு நிறைவடையும் வரை குறித்த காணியில் இடம்பெறும் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துவதுடன், புதிய கட்டுமானங்களை அனுமதிக்காதிருப்பதற்கும் மின்சார இணைப்புகளை வழங்குவதைத் தடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, ஆரையம்பதியை நகரமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறுகைத்தொழில் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு வழங்கி, அங்கு கடைத்தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
எனினும், குறித்த காணியை பிரதேச சபைக்கு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆரையம்பதி நகர அபிவிருத்திக்குத் தேவையான காணியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான பிரச்சினையை மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைத்து தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சாணக்கியன் வலியுறுத்தினார்.
பிரதேசத்தின் எதிர்காலத் தேவைகள் மற்றும் மக்கள் நலனை கருத்திற்கொண்டு அரச காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மறுபுறம், தமிழர்களின் வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
உலகநாச்சியார் கோவில் தொடர்பான அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர், அப்பகுதியுடன் தொடர்புடைய வரலாற்றுத் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஹேமமாலா தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவை உலகநாச்சியாரின் வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படுவதால், சம்பந்தப்பட்ட வரலாற்று மற்றும் தொல்லியல் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்த பின்னரே அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுப்பது பொருத்தமானது என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஆரையம்பதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
ஆயுர்வேத வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை, மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது.
மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை கூட்டங்களில் பதிவு செய்வதுடன் மட்டுப்படுத்தாமல், அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், மண்முனைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் மு. முத்துக்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைசார் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







