கண்டி – தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலான பிரதேசத்தில் நண்பரைக் கொலை செய்து, சடலத்தைக் காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் உயிரிழந்த நபருடன் ஒன்றாக மதுபானம் அருந்திய பின்னர் அவரைக் கொலை செய்ததாகவும், பின்னர் சடலத்தைக் காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததுடன் எரிந்த உடல் பாகங்களை அப்பகுதியில் வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் பி.எம்.ஜி. சாந்த சஞ்சய பண்டார என்ற 29 வயதுடையவர் என தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் காணாமல் போயுள்ளதாக அவரது இளைய சகோதரர் தலாத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இதையடுத்து பொலிஸார் அவரைத் தேடிவந்த நிலையில், காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாகத் தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது, உயிரிழந்த நபர் இறுதியாகத் தொடர்பில் இருந்த இருவர் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்தன. அதன் அடிப்படையில் குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார், நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போது கொலை மற்றும் சடலத்தை அப்புறப்படுத்தியமை தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இக்கொலைக்கான காரணம் இதுவரை முழுமையாக வெளியாகாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பின்னணி குறித்து கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களிடமும் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








