கடந்த ஓகஸ்ட் மாதம் வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஓகஸ்ட் மாதத்தில் பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய காலகட்டத்தை விட 1.5°C-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
உலகின் பல பகுதிகளில் கடந்த மாதம் கடுமையான காலநிலை மாற்றங்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் பதிவாகியுள்ளன. நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியங்களில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் உள்ளிட்ட அனர்த்தங்களுக்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணியாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, இந்தோனேசியா, கிரீஸ் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ பரவியுள்ளதுடன், ஹங்கேரி மற்றும் ருமேனியா கடுமையான வறட்சியையும் எதிர்கொண்டுள்ளன.
2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், உலக வெப்பநிலை உயர்வை தொழில்துறைக்கு முந்தைய காலகட்டத்தை விட 1.5°C-க்குள் கட்டுப்படுத்துவதற்கு சுமார் 200 நாடுகள் உறுதியளித்துள்ளன. நீண்டகால சராசரியாக கணக்கிடப்படும் இந்த வரம்பு, காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கான முக்கிய இலக்காகக் கருதப்படுகிறது.
எனினும், கடந்த நவம்பர் மாதத்துக்குப் பின்னர் முதல் முறையாக, ஓகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை மீண்டும் 1.5°C வரம்பைத் தாண்டியுள்ளதாக கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தின் உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை 16.96°C ஆகப் பதிவாகியுள்ளது. இது 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் இணைந்து இதுவரை பதிவான அதிகபட்ச மாதாந்திர வெப்பநிலை மட்டமாக அமைந்துள்ளது.
19ஆம் நூற்றாண்டில் புதைபடிவ எரிபொருட்களின் பரவலான பயன்பாட்டுக்கு முன்னர் நிலவிய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில், இந்த வெப்பநிலை 1.65°C அதிகமாகும்.
எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் வெளியாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் தற்போதைய காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன.
மேலும், துருவப் பகுதிகளைத் தவிர்ந்த உலகின் பெரும்பாலான கடல் பகுதிகளிலும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதனை அளவில் உயர்ந்துள்ளதாக கோபர்நிகஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.







