வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்கொண்டுவரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக அப்பகுதி மக்களின் குடும்ப வருமானம், வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், குறித்த பிரதேசங்களில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் பௌதீக வசதிகளின் குறைபாடுகள், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளுக்கான அணுகல், பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை ரீதியான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் சந்திப்பில் ஆராயப்பட்டது.
அத்துடன், குறித்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பிரதேச மட்டத்தில் மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம். தாஹிர், இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம்.எஸ். உதுமா லெப்பை, செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.







