கிளிநொச்சி பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் நிலைமையை கருத்திற்கொண்டு, மக்களின் கோரிக்கைக்கு அமைய இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் இன்று (10) திறந்து விடப்பட்டுள்ளது.
முரசுமோட்டை பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஊடாக நீர் திறக்கப்படாவிட்டால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்து, புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பினால் கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனப் பொறியியலாளரிடம் அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, நிலைமையின் தீவிரத்தை கருத்திற்கொண்டு கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இரணைமடு குளத்தின் இடது கரை வாய்க்கால் திறக்கப்பட்டுள்ளது.
எனினும், திறக்கப்பட்டுள்ள நீர் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், விவசாயிகள் குறித்த நீரை வயல் நிலங்களுக்குப் பாய்ச்சுவதையோ அல்லது வேறு விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.







