வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண நஷ்டஈட்டுத் தொகையை 6 இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 50 புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 7 கோடி ரூபா நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
வருடாந்தம் சுமார் 250 வெளிநாட்டு தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதாகவும், இவ்வாறான சம்பவங்களைக் குறைப்பதற்கான புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் 1 கோடி ரூபா வரை வீடமைப்புக் கடன் வழங்குதல் உள்ளிட்ட புதிய நலன்புரித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.








