முறையற்ற வழிகளில் பெறப்படும் சிம் அட்டைகள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், சிம் அட்டைகளுக்கான விதிமுறைகளை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த TRCSL பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நடைமுறை அமுலுக்கு வந்த பின்னர், புதிதாக சிம் அட்டைகளைப் பெறும் நபர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் சிம் அட்டையைப் பதிவு செய்து பெற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை பெரும்பாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும், 2027ஆம் ஆண்டில் நாட்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களையும் 100 சதவீதம் அடையாளம் காணும் வகையிலான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் அல்லது வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் சுமார் 3 கோடி சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சேவைத் தரம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








