இலங்கை கடற்படையினரால் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டின் உள்நாட்டு நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தியதுடன், வின்ச் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 63 பேரும் இந்நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மட்டக்களப்பு காத்தான்குடி நகரில் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தடைசெய்யப்பட்ட 44 மீன்பிடி வலைகளுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின்போது 26 டிங்கி படகுகள், ஒரு கெப் வாகனம் மற்றும் இரண்டு டிராக்டர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருகோணமலை ஜமாலியா, பவுல் பொயிண்ட், இலக்கந்தை, புறாத்தீவு, நதிதீவு, அலாஸ்வத்தை மற்றும் நிலாவெளி உள்ளிட்ட கடற்பரப்புகளிலும், யாழ்ப்பாணம் கட்கைக்காடு, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் மற்றும் மட்டக்களப்பு அறுகம்பே உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகள், வாகனங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோட் பே, கிண்ணியா, மூதூர், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







