இலங்கையில் தற்போது நிலவும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிலைமை, கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் பதிவான மிகக் கடுமையான எல் நினோ நிகழ்வாக மாறுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான எல் நினோ நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலைமை மிகவும் தீவிரமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், தற்போதைய நிலைமை வலுவான எல் நினோவாக மாறுவதற்கான சாத்தியம் 98 சதவீதம் என்ற உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை நாட்டில் அதிகளவான சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டின் மழைவீழ்ச்சி சற்று குறைவடையக்கூடும் எனவும், செப்டம்பர் மாத இறுதியிலிருந்து நாடு முழுவதும் மழைவீழ்ச்சி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய காலநிலை கணிப்புகளின்படி, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வழக்கமான அளவை விட கணிசமான அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், மழைவீழ்ச்சி அதிகரிக்கும் நிலையிலும், நாட்டின் சுற்றுச்சூழல் வெப்பநிலை வழமையான அளவை விட தொடர்ந்து உயர்வாகவே காணப்படும் என அஜித் விஜயமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.







