ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் இன்று (12) சற்றே சரிவு பதிவாகியுள்ளது.
உலக சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான ப்ரென்ட் (Brent) ரக கச்சா எண்ணெயின் விலை, நேற்று (11) காலை 108 அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருந்த நிலையில், இன்று 104.61 டொலராகக் குறைந்துள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) ரக கச்சா எண்ணெயின் விலையும் நேற்று 103.34 டொலராக இருந்த நிலையில், இன்று 100.05 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெயின் விலையும் நேற்று 122.48 டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 119.46 டொலராக குறைந்துள்ளது.
சுமார் ஒரு வாரமாக நிலவி வரும் தீவிரமான போர் பதற்றத்துக்கு மத்தியிலும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவுக்கு முக்கிய காரணியாக ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சாத்தியமான பேச்சுவார்த்தைகள் பார்க்கப்படுகின்றன.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஈரானிய அதிகாரிகள் குழுவொன்று ஓமன் நோக்கிப் புறப்படவுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த பல நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தணிவதற்கான சாத்தியம் குறித்த எதிர்பார்ப்பு உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்துக்கு ஒரு காரணியாக அமைந்துள்ளதாக சந்தை அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.







