இலங்கையின் முக்கிய அரசியல் மையங்களாக விளங்கும் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இன்று (12) அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தனித்தனியாக நடத்தும் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளமை அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் பேரணிகளின் ஒரு பகுதியாக, பொலன்னறுவையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு பிரம்மாண்ட விவசாயிகள் பேரணி நடைபெறவுள்ளது.
‘மக்கள் ஆட்சி – இரண்டு ஆண்டுகள் பலமாக, அனைவருக்கும் முன்னேற்றம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்தப் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதான உரையாற்றவுள்ளார்.
விவசாயிகள் மற்றும் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியில், அரசாங்கத்தின் கடந்த இரண்டு ஆண்டுகால செயற்பாடுகள் மற்றும் எதிர்வரும் காலத்திற்கான திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பேரணியில் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரும் பேரணியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தனித்தனியாக பேரணிகளை நடத்துவதால், இன்றைய அரசியல் நிகழ்வுகள் மீது பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.








