யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், பெண் விரிவுரையாளரின் பேச்சால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கழகச் செயற்பாட்டில் பங்கேற்றுவிட்டு விடுதிக்குத் திரும்பிய மாணவியிடம், விடுதிக்குப் பொறுப்பான பெண் விரிவுரையாளர் விசாரித்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலில் விரிவுரையாளர் அநாகரிகமாகப் பேசியதாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி, சம்பவம் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முறைப்பாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், மாணவி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சக மாணவிகள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.








