நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலையை கருத்திற்கொண்டு, யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2ஆம் வலயங்களை இன்று (14) முதல் ஒரு மாத காலத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை குறித்த இரண்டு வலயங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யால தேசிய வனம் 44 வகையான பாலூட்டிகள், 215 வகையான பறவைகள், 47 வகையான ஊர்வன மற்றும் 21 வகையான மீன் இனங்களுக்கு முக்கிய வாழிடமாக விளங்குகிறது. எனினும், தற்போதைய கடும் வறட்சி காரணமாக பூங்காவின் பல நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன், விலங்குகளுக்கு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், மரங்கள், செடிகொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து வருவதால் விலங்குகளுக்கு தேவையான உணவின் அளவும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விலங்குகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாணிக்க கங்கையின் நான்கு இடங்களில் சூரிய மின்சக்தி மூலம் இயக்கப்படும் மோட்டார்கள் பயன்படுத்தி நீர் பெறப்பட்டு, நிலத்தடி குழாய்கள் ஊடாக பூங்காவிலுள்ள குளங்களுக்கு நீர் செலுத்தப்படுகிறது.
மேலும், தினமும் சுமார் 200,000 லீட்டர் நீர் கொண்டு செல்லப்பட்டு, பூங்காவில் உள்ள இயற்கை மற்றும் செயற்கை நீர்நிலைகள் நிரப்பப்பட்டு வருகின்றன.
வறட்சியின் காரணமாக உணவு மற்றும் நீரைத் தேடி விலங்குகள் இடம்பெயரும்போது ஏற்படக்கூடிய மனித இடையூறுகளை குறைக்கும் நோக்கிலேயே யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2ஆம் வலயங்களை ஒரு மாத காலத்திற்கு மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








