சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் முக்கிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் முன்வைத்துள்ள இந்த யோசனையின்படி, 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள், இணையவழி விளையாட்டுகள் மற்றும் AI செட்போட்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம்.
மேலும், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் கண்காணிப்புடன் கூடிய விசேட “மினி கணக்குகள்” மூலமாக மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் வகையில் விதிமுறைகள் கொண்டுவரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் காணப்படும் அடிமையாக்கும் அம்சங்கள், சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலியான ஆபாசப் படங்கள் உள்ளிட்ட இணைய ஆபத்துகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
இந்த முன்மொழிவு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளும் அடுத்த கட்டமாக தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க உள்ளன. இதன் மூலம் சிறுவர்களின் இணையப் பயன்பாட்டில் எதிர்காலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா என்பது தீர்மானிக்கப்படலாம்.








