கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் நவீன இருதய நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கான பணிகள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதிய கட்டிடத்திற்கான நினைவுப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஜப்பான் அரசின் நிதியுதவியுடன், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரகமான JICA ஊடாக முன்னெடுக்கப்படும் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் இடம்பெறுகின்றன.
மொத்தமாக ரூ.4,185 மில்லியன் பெறுமதியைக் கொண்ட இத்திட்டத்தில், கட்டிட நிர்மாணத்திற்காக ரூ.2,403 மில்லியனும், மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ.1,782 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எட்டு மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருதய சிகிச்சைப் பிரிவில், நவீன அறுவைச் சிகிச்சை கூடங்கள், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள், உள்நோயாளர் வசதிகள் மற்றும் முழுமையான ஆய்வக வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிர்மாணப் பணிகளை 2028 மே மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தபோது, இந்தத் திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதாக வழங்கியிருந்த வாக்குறுதி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதியின் தலைமையில் இன்று நாட்டின் பல பகுதிகளில் பல முக்கிய சுகாதார உட்கட்டமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் ரூ.600 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமதா, திருகோணமலை வைத்தியசாலைக்கான இந்த உதவியானது இலங்கை – ஜப்பான் இடையிலான நீண்டகால சுகாதார ஒத்துழைப்பின் தொடர்ச்சியாகும் என தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும், இலங்கையின் நீண்டகால நம்பகமான பங்காளியாக சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய இருதய சிகிச்சைப் பிரிவு நிறைவடைந்த பின்னர், கிழக்கு மாகாணத்தில் இருதய நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.








